இலங்கை தாமரை கோபுரம்: மக்கள் பார்வையிட அனுமதி – சிறப்புகள், கட்டணம், நேரம் உள்ளிட்ட விவரங்கள்!!
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டஸ் டவர்) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கு, நேற்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
கொழும்பு மத்திய பகுதியில் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
சுமார் 7 வருடங்களில் தெற்காசியாவிலேயே உயரமான கோபுரமாக இது கட்டி முடிக்கப்பட்டது.
இந்த தாமரை கோபுர நிர்மாணத்திற்காக 113 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான நிதி செலவிடப்பட்டுள்ளது.
சீனா மூலம் இதற்காக 88.65 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றதுடன், எஞ்சிய தொகையை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு செலவிட்டுள்ளது.
தெற்காசியாவின் உயரமான கோபுரத்தின் சிறப்பம்சங்கள்
356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே உயரமான கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்கின்றது.
கொழும்பு – டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள பேர வாவியை அண்மித்து அமைந்துள்ள இந்த கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுரஅடி.
சுமார் 200 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் இந்த இடத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கோபுரத்தின் ஊடாக இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளி, ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
தாமரை கோபுரத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான மண்டபங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தின் 6ஆவது மாடியே மிகவும் சிறப்பு இடத்தைப் பிடிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6ஆவது மாடியில் உள்ள உணவகம் சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், உணவு உட்கொண்ட வண்ணமே கொழும்பு நகர் முழுவதையும் கண்டுகளிக்கும் வாய்ப்பும் இதனால் மக்களுக்கு கிடைக்கிறது.
7ஆவது மாடியானது, கோபுரத்தின் உயரமான இடத்திற்கு சென்று கொழும்பு நகரின் அழகை கண்டுகளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த கோபுரத்தில் 8 மின்தூக்கிகள் உண்டு. இங்கே நொடிக்கு 7 மீட்டர் உயரும் இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி பொறுத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாக கருதப்படுகிறது.
தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கையின் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் இனிவரும் காலங்களில் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றன.
எப்போது பார்வையிடலாம்? கட்டணம் எவ்வளவு?
இதேவேளை, இந்த தாமரை கோபுரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
10 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு 200 ரூபா நுழைவு சீட்டும், ஏனையோருக்கு 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நுழைவு சீட்டுக்களும் விநியோகிக்கப்படவுள்ளன.
அதேபோன்று, வெளிநாட்டவர்களுக்கு இந்த கோபுரத்திற்கு உள்ளே சென்று பார்வையிடுவதற்கு 20 டாலர் அறவிடப்படவுள்ளதாக கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கோபுரத்தின் மேல் மாடிக்கு சென்று பார்வையிடும் போது, கொழும்பு மாத்திரமன்றி, இலங்கையின் பல பகுதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
தாமரை வடிவம் ஏன்?
தெற்காசியாவில் உயரமான இந்த கோபுரத்துக்கு தாமரை வடிவம் தரப்பட்டதற்கான காரணம் இதுவரை தெளிவில்லாது காணப்படுகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னமும், தாமரை வடிவத்தை கொண்டமைந்தமை கடந்த காலங்களில் பாரிய பேசுபொருளாக அமைந்தது.
தமது கட்சியின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அரசியல் ஆய்வாளர்கள் அதனை நிராகரிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்தே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அதனால், இந்த தாமரை அடையாளத்திற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக கூற முடியாது என்றும் அவர் கூறுகின்றார்.
ராஜபக்ஷ குடும்பத்திற்கும், சீனாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்பட்ட நிலையிலேயே, தாமரை கோபுரத்திற்கு தாமரை வடிவம் அமைக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
ராஜபக்ஷ குடும்பத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானம் நிலையம், தாமரை கோபுரம் உள்ளிட்ட இலங்கையின் மிக பிரமாண்டமான திட்டங்களுக்கு சீனா உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.