மாணவன் மடியில் மாணவி… சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படங்கள்… பஸ் நிறுத்தத்தை அகற்றிய அதிகாரிகள்..!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி (சிஇடி) மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகிலுள்ள ஸ்ரீகார்யம் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச் செல்வது வழக்கம். பஸ் நிறுத்தத்தில் உள்ள பெஞ்சில் ஆண்-பெண் பேதமின்றி அருகருகே அமர்ந்து அரட்டை அடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் அந்த இரும்பு பெஞ்சை யாரோ துண்டு துண்டாக வெட்டி மூன்று நாற்காலிகளாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் இருவர் அருகருகே உட்கார முடியாது. ஒருவர் மட்டுமே இருக்கையில் அமரும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது. பொதுவெளியில் மாணவ-மாணவிகள் அருகருகே அமர்ந்து பேசுவது உள்ளூர் மக்களுக்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியானது. பெஞ்சை துண்டாக வெட்டி நாற்காலிகளாக மாற்றியதை கண்டித்து மாணவ-மாணவிகள் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதாவது, அந்த நாற்காலியில் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதில் மாணவன் மடியில் மாணவி உட்கார்ந்திருக்கிறார். ஒரு நாற்காலியில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். மாணவ மாணவிகள் அருகருகே உட்காரக்கூடாது என்ற நோக்கத்தில் சிலர் பெஞ்சை வெட்டியதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்த புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேயர் ஆர்யா எஸ்.ராஜேந்திரன் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
அத்துடன், ஸ்ரீகார்யத்தில் அதே இடத்தில் பாலின வேறுபாடு இல்லாத பேருந்து நிலையம் கட்டப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அந்த பேருந்து நிறுத்தத்தை அதிகாரிகள் இன்று அகற்றினர். பேருந்து நிறுத்தம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மாநிலத்தில் சிறுவர், சிறுமிகள் ஒன்றாக உட்காருவதற்கு எந்த தடையும் இல்லை என்று கூறிய மேயர், கட்டுப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் பழங்காலத்திலேயே வாழ்ந்து வருவதாக கூறினார்.