;
Athirady Tamil News

சிறுவர் போசணையில் மந்தமும் அசமந்தமும் !! (மருத்துவம்)

0

உயிர்களின் உரமாகவும் ஆரோக்கியத்தின் அச்சாணியாகவும் போஷாக்கு அமைவதால், அடிப்படைத் தேவைகளில் அகில அளவிலும் உணவே முதன்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. ஆரோக்கியமான சமூகத்தின் ஆணி வேர்களாக சிறுவர்கள் இருப்பதனால், சிறுவர் போசணையில் பன்மடங்கு கரிசனை கட்டாயமாகிறது.

குறையும் நிறையும்

 உலகிலுள்ள 5 வயதுக்கு உட்பட்ட 667 மில்லியன் சிறுவர்களில், 159 மில்லியன் சிறுவர்கள் குன்றிய வளர்ச்சியினாலும்; (Stunted), 50 மில்லியன் சிறார்கள் உடற்தேய்வடைதலாலும் (Wasted), 41 மில்லியன் சிறுவர்கள் அதிக எடையினாலும் (Over weight) பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இலங்கையில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில், 13 சதவீதத்தினர் வளர்ச்சி குன்றியவர்களாகவும் 20 சதவீதத்தினர் உடல் தேய்வடைந்தோராகவும் 24 வீதத்தினர் குறைவான நிறையுடையோராகவும் 0.7 சதவீதத்தினர் அதிக எடையுள்ளவர்களாகவும் உள்ளனர்.
 உலக சுகாதார நிறுவனத்தின், சிறுவர் போசணை மேம்படுத்தல் திட்டத்தின், உலக போசணை இலக்கு 2025இன் ஊடாக, 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் குன்றிய வளர்ச்சியை 40 வீதத்தால் குறைப்பதற்கும், உடற்தேய்வை 5 வீதத்துக்கும் குறைவாக குறைப்பதற்கும் அதிக உடல்நிறையை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கும், பிறப்பு நிறைக்குறையை 30 சதவீதத்தினால் குறைப்பதற்குமான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
 ஊட்டச் சத்துக்குறைபாடு, குழந்தைகளிலும் பெண்களிலும் தீவிரமானதாக உள்ளதோடு, தாய்மாரின் மந்தபோசணை நேரடியாகவே, நலிவுக் குழந்தை உருவாக்கத்திலும் குழந்தை இறப்புவீத அதிகரிப்பிலும் அதிக செல்வாக்கு செலுத்துகிறது.
 ஊட்டச் சத்தற்ற உணவுகள், சிறுவர் நலனில் அக்கறையின்மை, சமுதாய சமத்துவமின்மை மற்றும் வறுமை என்பன ஊட்டச் சத்துக் குறைபாட்டின் ஊக்கிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கியத்துவம்

உடல் வளர்ச்சி, விருத்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுத்தலின் ஊக்கியாகவும் உடற்சக்தித் தேவையின் உயிர் எரிபொருட்களாகவும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அமைகின்றன. மனிதனின் வளர்ச்சி மற்றும் விருத்தி நிலையில் சிறுவர் பராயம் முதன்மையானதும் முக்கியத்துவமானதுமாகும்.

வளர்ந்த மனிதனின் சராசரி உயரத்தின் 50 வீதமும் நுண்ணறிவின் 80வீதமும் குழந்தையின் வயது 2 வருடங்களாகின்ற போது பூர்த்தியடைகின்றன. சிறுவர்களின் சிறப்பான வளர்ச்சி மற்றும் விருத்தியை வினைத்திறனாக்கி, அவர்களின் அறிவாற்றலையும் ஆளுமைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு சிறுவர் போசணை தொடர்பில் சிறப்பு அவதானம் அவசியமாகிறது.

அவசியமான அளவோடு உட்கொள்ளப்படும் சமனிலை உணவுகள், ஆரோக்கிய வாழ்வின் அடித்தளமாக அமையும். மந்த நிலை போசணையானது, பலவீனமான உடல், பக்குவமற்ற உளவிருத்தி, நிர்ப்பீடணக் குறைபாடும் இலகுவாக நோய்வாய்ப்படலும் மற்றும் அறிவும் ஆளுமையும் மங்குதல்;; போன்றவற்றுக்கு வழிகோலும்.

ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition)

பற்றாக்குறையான அல்லது தவறான விகிதத்தில் ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய, சமனிலையற்ற உணவினால் உருவாகும் மருத்துவப் பிரச்சினையே ஊட்டச்சத்து குறைபாடாகும். பொதுவாக இது, உணவு உள்ளெடுத்தல் மற்றும் அகத்துறிஞ்சல் குறைபாடு, உடலிலிருந்து அளவுக்கதிகமாக ஊட்டம் இழக்கப்படுதல் போன்ற குறைபாடுகளால் ஏற்பட்டாலும், உணவையும்; குறிப்பிட்ட சில ஊட்டச் சத்துக்களையும் சமனிலை மீறி அதிகளவில் உட்கொள்வதனால் உருவாகும் மிகையூட்ட நிலையையும் குறிக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு – ஊக்குவிக்கும் உபாயங்கள்

பெரும்பாலும் வறுமை நிலையை பிரதான காரணியாக முன்னிலைப்படுத்தினாலும், உண்மையில், இன்னும் பல இதர காரணிகளின் உந்துதல்களே ஊட்டச்சத்து குறைபாட்டை தீவிரமாக்குகின்றன. குறைந்தளவான உணவு உட்கொள்ளல், உணவில் நாட்டமின்மை, இதர நோய்த் தாக்கங்கள், சுகாதார சேவைகளை பெறமுடியாமை, தூய்மையற்ற சூழ்நிலைகள், குழந்தைப் பராமரிப்புக் குறைபாடு, தனிமனித சுகாதார பழக்கவழக்கங்கள், சிறுவர் போசணை தொடர்பான பெற்றோரின் தெளிவின்மையும் பிழையான அணுகுமுறைகளும் ஏனைய சில முக்கிய காரணிகளாகும்.

அதிக அக்கறையின் முக்கியத்துவம்

குறிப்பாக மனிதக்கரு மற்றும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், மீளமுடியாத உடல், உளரீதியான பாதிப்புக்களின் அபாயத்தை வெகுவாக அதிகரிக்கிறது. சிறுவர் ஊட்டச்சத்து மேம்பாடானது, ஒட்டுமொத்த உலக நோய்த் தாக்க வீதத்தை, மூன்றிலொரு பங்கு குறைக்கிறது. சிறுவர்களின் உடல் வளர்ச்சியின் ஒருவீத முன்னேற்றமானது, பின்னாளில் அவர்கள் வளர்ந்தவர்களானதும் 4வீத உழைப்பு உயர்வுக்கு உந்துகிறது.

குன்றிய வளர்ச்சி (Stunting) – பின்னணி

வயதுக்கேற்ற வளர்ச்சியற்ற, தீவிர போசணைக் குறைபாட்டு நிலையே குன்றிய வளர்ச்சியாகும். பாதிக்கப்பட்டோர், சிறுவர்களின் சாதாரண வயது – வளர்ச்சி வரைபிலிருந்து 2 புள்ளிகள் குறைவான (-2SD) நியமவிலகலைக் கொண்டிருப்பர்.

இந்நிலையானது, பொதுவாக குழந்தைகளின் முதல் 1000 நாள் வாழ்வு காலத்தினுள் நிகழும், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொடர் தொற்றுக்களின் மீளமுடியாத கூட்டு விளைவாகும்.

குன்றிய வளர்ச்சி (Stunting) – பாதிப்பு
நாளடைவில் அறிவாற்றல், ஆளுமை, ஆக்கவளம், ஆரோக்கியம் மற்றும் உடல் விருத்தி போன்றவற்றில் மிகவும் மோசமான பின்னடைவுகளை ஏற்படுத்தும். இச்சிறுவர்கள், கற்றல் குறைபாடுகள், அதிக உடற்பருமன் மற்றும் வயது வந்து உழைக்கும் நிலையில், சராசரியாக 22வீத ஊதிய இழப்பு போன்ற அபாயகர வாழ்வியல் தாக்கங்களுக்கு உட்படுவர்.

குன்றிய வளர்ச்சி – பாதுகாப்பு

போசணை விழிப்புணர்வூட்டல், கர்ப்பிணிகள் மற்றும் கருத்தரிப்பு வயது பெண்களின் போசணை மேம்பாடு,
தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மற்றும் தொற்றுக்களைத் தடுக்கும் சுகாதார பழக்கவழக்கங்கள் போன்றவற்றை, நாளாந்ந வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவதனால் இக்குறைபாட்டின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்கலாம்.

உடற்தேய்வு (Wasting) – பின்னணி

வளர்ச்சிக்கேற்ற உடற்திணிவற்ற தீவிர ஊட்டச்சத்து குறைபாடாகும். தாக்கமுற்றோர், சிறுவர்களின் சாதாரண எடை-உயர வரைபிலிருந்து 2 புள்ளிகள் குறைவான (-2SD) நியமவிலகலைக் கொண்டிருப்பர். ஊட்டச்சத்துக் குறைபாடுகளும், நிர்ப்பீடணக் குறைபாட்டினால் நிகழும் தீவிர தொற்றுக்களும், விரைவான உடல் எடையிழப்பை ஏற்படுத்துகின்றன.

உடற்தேய்வு – பாதிப்பு

குன்றிய அறிவாற்றல் மற்றும் குறுகிய ஆளுமை விருத்திக்கு வித்திடுவதோடு, பின்னாட்களில் தொற்றாநோய்த் தாக்கங்களையும் தீவிரப்படுத்தும். சுவாசப்பைத் தொற்று, வயிற்றோட்டம் மற்றும் சின்னம்மை போன்ற தொற்றுக்களின் அபாய அளவை அதிகரிப்பதோடு அவற்றினால் நிகழும் சிறார் மரண வீதத்தையும் அதிகரிக்கும்.

உடற்தேய்வு – பாதுகாப்பு

தீவிர ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக கூட்டிணைந்த பல்துறை திட்டங்களை தீட்டுவதோடு செயற்படுத்தல், பொதுவான குழந்தைப்பருவ தொற்றுக்களை தடுத்தல், தொற்றுள்ளவர்களுக்கான தனித்துவ சிகிச்சைகளை வழங்குதல், பெண்களின் குருதிச்சோகை குணப்படுத்தல், குழந்தையின் பிறப்பு நிறைக் குறைவு மேம்பாடு போன்றவற்றின் மூலமாக உடற்தேய்வை கட்டியெழுப்ப முடியும்.

நிறைக்குறைவு (Underweight) – பின்னணி
வயதுக்குரிய எடையற்ற மந்தபோசணை நிலையாகும். குறைபாடுடையோர், சிறுவர்களின் சாதாரண வயது – எடை வரைபிலிருந்து 2 புள்ளிகள் குறைவான (-2SD) நியமவிலகலைக் கொண்டிருப்பர். பொதுவாக உணவு சமிபாடு மற்றும் அகத்துறிஞ்சலோடு தொடர்புடைய அனுசேபக் குறைபாடுகளாலும், பரம்பரைத்தாக்க பின்னணியினாலும் ஏற்படும்

நிறைக்குறைவு – பாதிப்பு

இப்பாதிப்பானது நாட்பட்ட நிலையில், ஏனைய போசணைக் குறைபாடுகளான குன்றிய வளர்ச்சி மற்றும் உடற்தேய்வு போன்ற நிலைகளுக்கு உந்திச் செல்லும். கட்டுப்படுத்த தவறுகின்ற போது, சிறுவர்களின் தொற்று அபாயங்களையும் குழந்தை இறப்பு வீதத்தையும் கணிசமாக அதிகரிக்கும்.

நிறைக்குறைவு – பாதுகாப்பு

சமிபாடு மற்றும் அகத்துறிஞ்சல் கோளாறுகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதோடு, உணவு நாட்டத்தையும் உடற்திணிவையும் அதிகரிக்கின்ற நுண்ணூட்டங்களையும், அதிக கலோரி உணவுகளையும் மருத்துவ ஆலோசனையுடன் உட்கொள்ள வேண்டும். அதீத உடற்திணிவு (Overweight) – பின்னணி உயரத்துக்கேற்ற விகிதத்தில் அல்லாமல், உடல் எடையை அதிகமாகக் கொண்டுள்ள அசமந்த போசணைக் குறைபாடாகும். இச்சிறுவர்கள், சிறுவர்களின் சாதாரண நிறை – உயர வரைபிலிருந்து 2 புள்ளிகள் அளவுக்கதிகமான (+2SD) நியமவிலகலைக் கொண்டிருப்பர்.

இந்நிலையானது, சமனிலையற்ற உணவுகளை மிகையூட்டுவதனால் உருவாவதும் உலகளவில், சிறுவர் பராய அதீத உடற்பருமனுக்கான (Obesity) அடித்தளமாகவும் அமைகிறது.

அதீத உடற்திணிவு – பாதிப்பு

நாளடைவில் அதீத உடற்பருமனுக்கு உந்துவதோடு, அதனை அடிப்படை அபாயக் காரணியாக கொண்ட தொற்றா நோய்களுக்கான சந்தர்ப்பத்தையும் கணிசமாக அதிகரிக்கும். இச்சிறுவர்கள் பின்னாளில் நீரழிவு, மூட்டுவாதம், பல்வகை புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய்த் தாக்கங்களினால் இலகுவாக பாதிக்கப்படுவர். இதனால் உடற்பலவீனமும் முதிர்வற்ற இறப்புக்களும் அதிகரிக்கும்.

அதீத உடற்திணிவு – பாதுகாப்பு

பாதிப்புக்கள் பற்றி பெற்றோரை தெளிவுப்படுத்தல், பொருத்தமான உணவுக் கட்டுப்பாடு, சமனிலை உணவூட்டம், சிறார்களுக்கென சிபாரிசு செய்யப்பட்ட உடற்பயிற்சிகள் மற்றும்; சிறுவர் போசணை தொடர்பான வௌ;வேறு சமூகமட்ட விழிப்புணர்வூட்டல் போன்ற செயன்முறைகளின் ஊடாக இப்பாதிப்புக்களை முற்றாகவே தடுக்க முடியும்.

ஊட்டச்சத்து குறைபாடு – நிவர்த்தியாக்கல்

உலகில் ஒரு பகுதி மிதமிஞ்சிய உணவு உற்பத்தியினால்; மிகையூட்டத்தையும் மறுபகுதி பொதுவாக பல்வகை காரணிகளால், பட்டினியாலும் பாதிக்கப்பட்டு குறையூட்டத்தையும் அனுபவிக்கிறது. ஆகையினால், உலகளவில் உணவூட்டம் மற்றும் சுகாதார பராமரிப்பில் சமனிலையை உருவாக்குகின்றபோதே, ஊட்டச்சத்து குறைபாட்டு நாணயத்தின் எதிரெதிர்ப் பக்கங்களான போசணையின் மந்தமும் அசமந்தமும் முற்றாக அஸ்தமிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.