பள்ளி லிப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கித் தவித்த ஆசிரியை- படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழப்பு..!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் வடக்குப் பகுதியான மலாடில் செயல்பட்டு வரும் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியாக வேலை பார்த்து வந்தவர் ஜெனல் பெர்னாண்டஸ் (வயது 26). நேற்று தனது பள்ளியில் உள்ள 6வது மாடியில் இருந்து கீழே 2வது மாடியில் உள்ள ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார்.
அப்போது அவரது கைப் பை, லிப்ட் கதவுகளுக்கு இடையே மாட்டிக் கொண்டது. உடனே குனிந்த அந்த பையை ஆசிரியை எடுத்த நிலையில் அவரது தலை இரண்டு கதவுகளுக்கும் இடையே சிக்கியது. அவரது அபாய குரலை கேட்ட பள்ளி ஊழியர்கள் விரைந்து சென்று அந்த ஆசிரியை தலையை பிடித்து வெளியே இழுத்தனர். படுகாயம் அடைந்த நிலையில் அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். லிப்ட் இயக்கப்பட்டதில் ஏதேனும் சதி இருந்ததாக தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துணை ஆணையர் விஷால் தாக்கூர் தெரிவித்தார். லிப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கி ஆசிரியை உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.