;
Athirady Tamil News

மத்திய பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளை விடுவித்தார் பிரதமர் மோடி..!!

0

உலகின் அரிய வகை விலங்குகளில் சிறுத்தையும் ஒன்று. இந்தியாவை அக்பர் ஆட்சி செய்தபோது இங்கு 1000- க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த சிறுத்தை இனம் கொஞ்சம், கொஞ்சமாக அழிய தொடங்கியது.

1948-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்த கடைசி சிறுத்தையும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு இந்தியாவில் சிறுத்தை இனமே இல்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து நமீபியாவுக்கு சென்ற சிறப்பு விமானத்தில் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது. இந்த சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.

பின்னர் அந்த சிறுத்தைகளை கேமராவிலும் படம்பிடித்தார். நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் மற்ற விலங்குகளை காட்டிலும் விசேஷ குணங்களை கொண்டது. இந்த சிறுத்தைகள் பறவைகள் போல ஒலி எழுப்பும். சிங்கம் போல் கர்ஜனை செய்வதில்லை. கூரிய பார்வை திறன் கொண்டது. இதன் கால்கள் மெலிந்து நீண்டு காணப்படும். குறைந்தது 72 கிலோ எடையுடையதாக இருக்கும். ஒன்றரை மீட்டர் உயரம் கொண்டதாகவும், நீளமான வாலுடனும் இருக்கும்.

மான் மட்டுமே இதன் விருப்ப உணவாகும். அடுத்து முயல் மற்றும் பறவைகளையும் வேட்டையாடும். மான்களை கண்டால் அதனை துரத்தி பிடிக்க ஓடும் வேகம் மனிதனின் ஓடும் வேகத்தை விட அதிகமாகும். அதாவது சிறுத்தை ஓட தொடங்கிய 3 வினாடிகளில் அதன் வேகம் சுமார் 97 கிலோ மீட்டராக இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 113 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இதுவே ஒரு மனிதன் ஓட தொடங்கினால் அவனது வேகம் மணிக்கு 43.99 கிலோ மீட்டர்தான். சிறுத்தை பூனை இனத்தை சேர்ந்ததாகும்.

அதாவது காட்டு பூனையின் பரிணாம வளர்ச்சியே சிறுத்தை என்று கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலும், ஈரான் நாட்டிலும் இத்தகைய சிறுத்தைகள் அதிக அளவில் காணப்படுகிறது. ஆப்பிரிக்காவில் 8 ஆயிம் சிறுத்தைகளும், ஆசியாவில் 50-க்கும் கீழான சிறுத்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.