;
Athirady Tamil News

வேளச்சேரி, பெருங்களத்தூர் புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

0

நெடுஞ்சாலைத்துறை
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில் ரூ.78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை-வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியையும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில் ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு-சென்னை வழித்தட பாலப்பகுதியையும் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

2 அடுக்கு மேம்பாலம்
சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.145.49 கோடி மதிப்பீட்டில்
விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம்-வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இரண்டு அடுக்கு மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிதட ஒரு வழி மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து 1,028 மீட்டர் நீளத்தில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் 2-ம் அடுக்கு மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு, முதல்-அமைச்சரால் 1.11.2021 அன்று திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

நெரிசல் குறையும்
அதன் தொடர்ச்சியாக தற்போது, வேளச்சேரியில் ரூ.78.49 கோடி செலவில் வேளச்சேரி புறவழிச்சாலை-வேளச்சேரி-தாம்பரம் சாலையை இணைத்து 640 மீட்டர் நீளத்தில் முதல் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.

4 பாலப்பகுதிகள்
அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.37 கோடி மதிப்பீட்டில் பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு-சென்னை பாலப்பகுதி கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய 4 பாலப்பகுதியை உடையது. இதில் ஒரு பாலப்பகுதி சென்னை-செங்கல்பட்டு வழித்தட போக்குவரத்திற்கும், மற்றொரு பாலப்பகுதி செங்கல்பட்டு-சென்னை வழித்தட போக்குவரத்திற்கும் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை-செங்கல்பட்டு
மேலும் சீனிவாசராகவன் தெரு பகுதிக்கு ஒரு பாலப்பகுதியும், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பகுதிக்கு மற்றொரு பாலப்பகுதியும் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு-சென்னை பாலப்பகுதி 743 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட இருவழித்தட ஒரு வழி மேம்பாலமாகும். இப்பாலம் திறக்கப்பட்டு உள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு-சென்னை மார்க்கத்தில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தாம்பரம், சென்னை விமான நிலையம், கிண்டி, கோயம்பேடு மற்றும் சென்னையின் இதர பகுதியை சேர்ந்த மக்களும் மிகுந்த பயனடைவார்கள்.

பங்கேற்றோர்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் குமார், தலைமை பொறியாளர் (நெடுஞ்சாலை, பெருநகரம்) கோதண்டராமன், தலைமை பொறியாளர் (நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.