ஹெரோயினின் பிடியில் யாழில் 20 கிராமங்கள்!!
உயிர்க்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோயினைப் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதற்கு அடிமையான 320 பேர் வரையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ். போதனா மருத்துவமனையில் ஹெரோயினுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையம் திறக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் 134பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், யாழ். மாவட்டத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஹெரோயின் பாவனைக்கு முற்றாக அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது. ஹெரோயினுக்கு அடிமையானவர்களில் அதிகமானோர் 18 – 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், யாழ். நகரிலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களும் இதற்குப் பழக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா, பொருளாதார நெருக்கடி எனப் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் யாழ். குடாநாட்டில் உயிர்க்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோயின் பயன்பாடு பல்கிப் பெருகியுள்ளது.
கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக உயிர்க்கொல்லி ஹெரோயின் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்படுகின்றது. இங்குள்ள பல நூற்றுக்கணக்கான முகவர்கள் ஊடாக அவை குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
உயிர்கொல்லி ஹெரோயினை ஊசி மூலமே அதிகளவானோர் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம் தொடக்கம் 300 மில்லி கிராம் வரையில் நுகர்கின்றனர்.
18 – 23 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே உயிர்க்கொல்லி போதைப் பொருளான ஹெரோயினை அதிகளவில் நுகர்கின்றனர். இதனைத் தவிர பாடசாலை மாணவர்களும் நுகர்கின்றனர். ஹெரோயின் நுகரும் பெரும்பாலான இளைஞர்களின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தாமே தமது பிள்ளைகளை பொலிஸில் ஒப்படைக்கின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன. சில பெற்றோர் மருத்துவமனைகளிலும் தமது பிள்ளைகளை ஒப்படைத்துள்ளனர்.
‘எவ்வளவு காலம் சென்றாலும் பரவாயில்லை. இவனை நீங்கள் வைச்சிருங்கோ. வெளியில விட்டால் பெரிய பிரச்சினை’ என்று தெரிவித்து தாய் ஒருவர் அண்மையில் தனது மகனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஹெரோயின் பாவனைக்கு அடிமையான சுமார் 320 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையானமையால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களும் இதற்குள் உள்ளடங்குகின்றனர்.
உயிர்க்கொல்லி போதையான ஹெரோயின் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்வதால், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விசேட சிகிச்சைப் பிரிவு இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை 134 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் சுமார் 20 கிராமங்கள் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்களின் கூடாரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்களிலுள்ள இளைஞர்களில் அநேகர் இதனைப் பயன்படுத்துகின்றமையும் பல்வேறு தரப்புக்கள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.