யாழ். மாவட்ட கரப்பந்தாட்டம் இன்று முதல் ஆரம்பம்!!
யாழ். மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் தமது அங்கத்துவ கழகங்களுக்கு இடையில் வருடாவருடம் நடத்துகின்ற கரப்பந்தாட்டத்தொடர் இன்று முதல் ஆரம்பமாகின்றது.
2021ஆம் ஆண்டுக்கான தொடர், கொரோனாத் தொற்றுக் காரணமாக இடம்பெறாத நிலையில் இந்தமுறை தொடருக்குப் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நடப்பு வருடத் தொடர், இன்று பெண்கள் பிரிவு போட்டியுடன் ஆரம்பமாகின்றது. புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்ற இந்தப் போட்டியில் 12 அணிகள் பங்கெடுக்கின்றன.
இந்தமுறை போட்டித்தொடரின் விசேட அம்சமாக ஆண் கள் ‘பி’ பிரிவில் பிராந்திய ரீதியிலான தகுதிச் சுற்று அடிப்படையில் அணிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. வலிகாமம், தீவகம், கோப்பாய், யாழ்ப்பாணம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி என ஆறு பிராந்திய போட்டித் தொடர்களிலிருந்து 10 அணிகளும், அவற்றுடன் நாயன்மார்கட்டு – பாரதி மற்றும் அச்சுவேலி – விக்னேஸ்வரா அணிகள் உள்ளடங்கலாக 12 அணிகள் கிண்ணத்துக்காகப் போட்டியிடுகின்றன.
பிரதான போட்டித்தொடரான ‘ஏ’ பிரிவு ஆண்களுக்கான போட்டித்தொடரில் மாவட்டத்தில் முன்நிலையில் தரப் படுத்தப்பட்டுள்ள 10 அணிகள் போட்டியிடுகின்றன.
‘ரவுண்ட் ராபின்’ முறையில் இடம்பெறும் முதலாவது சுற்றில் அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட இரு குழுக்களாக போட்டியிடும், குழு நிலை போட்டி
களின் நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களை தமதாக்குகின்ற அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
முதலாவது சுற்றுக்காக ‘ஏ’ பிரிவில் ஆவரங்கால் இந்து இளைஞர், உடுப்பிட்டி நவஜீவன்ஸ், புத்தூர் வளர்மதி, சண்டிலிப்பாய் இந்து இளைஞர், பன்னாலை கணேசன் ஆகிய அணிகளும் குழு ‘பி’ பிரிவில் ஆவரங்கால் மத்தி, தொண்டைமானாறு கலையரசி, புத்தூர் கலைமதி, புத்தூர் சென்றல் ஸ்ரார் மற்றும் மட்டுவில் மோகனதாஸ் அணிகளும் போட்டியிடுகின்றன. ‘ஏ’ பிரிவு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்று முதல் அடுத்துவரும் சனிக்கிழமை வரையில் புத்தூர் வளர்மதி, புத்தூர் கலைமதி, ஆவரங்கால் இந்து இளைஞர் மற்றும் ஆவரங்கால் மத்தி ஆகிய விளையாட்டுக் கழக மைதானங்களில் இரவு நேர போட்டிகளாக இடம்பெறவுள்ளன.