புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..!!
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் இன்று பிறந்தது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த காரியம் நிறைவேறும்.
ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணுகின்றனர். அதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு வருகின்றனர். மேலும் வரும் 27-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
குறிப்பாக ஏழுமலையானுக்கு உகந்த 3-ம் சனிக்கிழமை அன்று இந்த ஆண்டு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்து மக்களுக்கு காட்சி தர உள்ளது மிகவும் சிறப்பு ஆகும். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று புரட்டாசி மாதம் பிறந்ததால் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பினர். இலவச தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் 30 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டு உள்ளனர். திருப்பதியில் நேற்று 82,392 பேர் தரிசனம் செய்தனர். 41,800 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.