பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு பயிற்சி- பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது..!!
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் இன்று சோதனையில் ஈடுபட்டது.
தெலுங்கானாவில் 38 இடங்களிலும், ஆந்திராவில் 2 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் மற்றும் ரூ.8.31 லட்சத்திற்கும் அதிகமான பணம் உள்ளிட்டபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு முதலில் தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் காவல் நிலையத்தில் ஜூலை 4 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது மாநில காவல்துறையின் விசாரணையின் போது, அப்துல் காதர், ஷேக் சஹதுல்லா, முகமது இம்ரான் மற்றும் முகமது அப்துல் மொபின் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், மேல் விசாரணைக்காக ஆகஸ்ட் 26 அன்று தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.