;
Athirady Tamil News

கேரள விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி..!!

0

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். 11-ந் தேதி, பாதயாத்திரை கேரளாவில் நுழைந்தது. இடையில் ஒரு நாள் ஓய்வு எடுத்த நிலையில், 11-வது நாள் பாதயாத்திரை நேற்று நடந்தது.

கேரள மாநிலம் ஹரிபாடு என்ற இடத்தில் இருந்து காைல 6½ மணிக்கு யாத்திரை தொடங்கியது. ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரமேஷ் சென்னிதாலா, கே.முரளீதரன், கொடிக்குன்னில் சுரேஷ், கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் ராகுல்காந்தியுடன் நடந்தனர். சாலையின் இருபுறமும் ராகுல்காந்தியை பார்க்க ஏராளமானோர் திரண்டு நின்றனர். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தகர்த்து, அவர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார்.

மக்கள் ஓடிவந்து ராகுல்காந்தியை கட்டிப்பிடித்துக் கொண்டனர். அவர்கள் சொல்வதை அவர் காது கொடுத்து கேட்டார். ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த பிறகு, வழியில் உள்ள ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட தேநீரை அருந்தினார்.

தொடர்ந்து நடந்த பாதயாத்திரையின்போது, ஒரு சிறுமி, தான் வரைந்த ஓவியத்தை ராகுல்காந்தியிடம் வழங்கினாள். வழியில் ைசக்கிளில் சென்றவர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார். 13 கி.மீ. தூரம் நடந்த நிலையில், ஒட்டப்பனை என்ற இடத்தில் காலை நேர நடைபயணம் முடித்துக் கொள்ளப்பட்டது.

அருகில் உள்ள கருவட்டா என்ற இடத்தில், ராகுல்காந்தியும், பாதயாத்திரையில் பங்கேற்ற மற்றவர்களும் மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். பின்னர், குட்டநாடு மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். மாலை 5 மணியளவில், அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள புறக்காடு என்ற இடத்தில் இருந்து மாலை நேர பாதயாத்திரை தொடங்கியது. 7½ கி.மீ. நடந்த பிறகு, மாலை 7 மணியளவில் வந்தனம் பகுதியில் உள்ள டி.டி.மருத்துவ கல்லூரி அருகே நேற்றைய பாதயாத்திரை நிறைவடைந்தது.

அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் புன்னப்ரா என்ற இடத்தில் உள்ள கார்மல் என்ஜினீயரிங் கல்லூரியில் அனைவரும் இரவில் தங்கினர். இதுவரை பாதயாத்திரையில் 200 கி.மீட்டரை நிறைவு செய்து விட்டதாகவும், இந்திய ஒற்றுமை பயணத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக கேரள மக்கள் ஆக்கிவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. பாதயாத்திரையின்போது தன்னை சந்தித்த மக்களின் புகைப்படங்களை வெளியிட்ட ராகுல்காந்தி, ”இவை படங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் உணர்வு, அன்பு” என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.