நாடு முழுவதும் புதிதாக 4,858 பேருக்கு தொற்று- கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!!
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 15-ந் தேதி பாதிப்பு 6,422 ஆக இருந்தது. மறுநாள் 6,298, 17-ந் தேதி 5,747, நேற்று 5,664 ஆக இருந்த நிலையில், 4-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 2,042, மகாராஷ்டிரத்தில் 602 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 39 ஆயிரத்து 46 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,735 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 48,027 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 105 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 8 மரணங்கள் உள்பட மேலும் 18 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,355 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. கடந்த 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் கேரளாவில் 14,865 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில் 9,805 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு சுமார் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி பொது இடங்களில் அதிக கூட்டம் கூடியதே தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. கேரளா தவிர மேற்கு வங்கத்திலும் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.