பிரியாவிடை கொடுத்த மக்கள்… இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!!
பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று காலை வரை ராணி எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு உள்ளூர் நேரப்படி பகல் 11 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில் பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில் ராணி எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இறுதி பயணம் தொடங்கியது. ராணி எலிசபெத் உடல் வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. அப்போது சவப்பெட்டி மீது ராணிக்கான கிரீடம், செங்கோல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது.
பிரார்த்தனைக்குப் பின்னர் அவரது உடல் விண்ட்சர் கோட்டையின் வழியாக செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக்க பொதுமக்கள், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர். கோட்டை மைதானத்தில் இருந்து துப்பாக்கிகள் முழங்க அரச மரியாதை அளிக்கப்பட்டது. ஜார்ஜ் தேவாலயத்துக்குள் சவப்பெட்டி கொண்டு வந்ததும், அங்கு கல்லறை ஜெபம் நடைபெற்றது.
ஜெபத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான தனிப்பட்ட முறையில் நெருக்கமான விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த ஜெபத்தைத் தொடர்ந்து ராணியின் ஆட்சி நிறைவுறுவதைக் குறிக்கும் சம்பிரதாயங்கள் நடைபெற்றன. ஏகாதிபத்திய அரச மணிமுடி, ராணியின் சிலுவைக் கோளம், செங்கோல் போன்றவை சவப்பெட்டியின் மேலே இருந்து அகற்றப்பட்டன. பிறகு ராணியின் உடல் ராயல் வால்ட்டில் இறக்கப்பட்டு அரச பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
https://www.maalaimalar.com/news/world/strong-earthquake-shakes-mexicos-pacific-coast-514380?infinitescroll=1