ஆளுயர சிலையுடன் உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு கோவில்..!!
தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர், அபிமான நட்சத்திரத்துக்கு தொண்டரோ, ரசிகரோ கோவில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம்தான். அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அந்த ஊர்க்காரரான பிரபாகர் மவுரியா, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டியுள்ளார். இங்கு தலைக்குப் பின் ஒளிவட்டம், வில்-அம்புடன் யோகி ஆதித்யநாத்தின் ஆளுயர சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. காவி ஆடையும் அணிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலில் காலை, மாலை இருவேளை பூஜையுடன், ‘பக்தர்களுக்கு’ பிரசாதமும் வினியோகிக்கப்படுகிறது.
பைசாபாத்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையையொட்டி பாரத்குண்ட் என்ற இடத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. வனவாசம் சென்ற ராமருக்கு அவரது சகோதரர் பரதன் இங்குதான் விடை கொடுத்ததாக கூறப்படுகிறது. ராமர் கோவில் கட்டப்படும் ராம ஜென்ம பூமியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. கோவிலை கட்டியுள்ள பிரபாகர் மவுரியா, ‘தனது மக்கள் நலப்பணிகளால், கடவுள் நிலையை எட்டியுள்ளார் யோகிஜி. அதனால்தான் அவருக்கு கோவில் கட்டும் எண்ணம் எனக்கு வந்தது. ராமர் கோவில் கட்டும் அவருக்கு நான் கோவில் கட்டியுள்ளேன்’ என்கிறார்.
ராமரை தான் வழிபடுவதைப் போலவே தினமும் யோகி ஆதித்யநாத்தை மந்திரம் சொல்லி வழிபடுவதாக மவுரியா கூறுகிறார். மவுரியாவுக்கு நிரந்தர வேலையோ, நிலமோ இல்லை. அப்படியானால், இந்தக் கோவில் கட்டுவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்… ‘பஜனைகள், பக்திப் பாடல்களை நான் யூடியூப்பில் வெளியிட்டு மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன். அந்தப் பணத்தில்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கிறேன்’ என்று விளக்கம் அளிக்கிறார். இதற்கிடையில் ‘யோகி ஆதித்யநாத் கோவில்’ பற்றி கேள்விப்பட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு பூடகமான டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.