திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் “ஆலய சுத்தி” இன்று நடந்தது. ஆண்டுக்கு 4 முறை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது.
யுகாதி பண்டிகை ஆனிவார ஆஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவம் வைகுண்ட ஏகாதசி விழாக்கள் நடக்கும் முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று கோவிலை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடந்தது. ஆனந்த நிலையம் முதல், பங்காரு வாகிலி வரை கோவிலில் உள்ள துணைச் சன்னதிகள், கோவில் வளாகம், மண்டபம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பித்தளை, தாமிர பாத்திரங்கள், ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
தூய்மைப்பணி முடிந்ததும் நாம கொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை இலை, பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இந்தப் பணி முடிந்ததும் மூலவர் மீது போர்த்தப்பட்ட தூய வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டது. இதையடுத்து 12 மணி அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.