திருக்கோணேஸ்வரத்துக்கு யாத்திரை செல்லுங்கள்!!
திருகோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம் தமிழர்கள் இந்த நாட்டின் மூத்த குடிகள் என்பதை எடுத்துரைக்கின்ற வரலாற்றுச் சான்றாதாரமாகும்.
தவிர, இலங்கை வேந்தன் இராவணேஸ்வரனால் அமைக்கப்பட்ட சிவனாலயம் என்பதும் இங்கு குறித்துரைக்கப்பட வேண்டிய விடயம்.
இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருமூலர் ஈழ நாட்டைச் சிவபூமி என்று போற்றினார்.
அதனை மேலும் வலுப்படுத்துவதாகத் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் மீது நாயன்மார்கள் பாடிய தேவாரத் திருமுறைகள் அமைகின்றன.
எனினும் திருக்கோணேஸ்வரம் சிவனாலயத்தைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முகாமிட்டிருப்பதனாலும் ஆலயத்துக்கு அடியவர்கள் செல்வதற்குப் படையினர் மிகுந்த கட்டுப்பாடுகளை – விதித்திருப்பதனாலும் கோணேஸ்வரத்துக்குச் செல்லுகின்ற அடியார்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனலாம்.
உண்மையில் ஒரு பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தின் கட்டுக்கோப்பைத் தீர்மானிப்பதில் அங்கு செல்லுகின்ற அடிய வர்களின் எண்ணிக்கை உயர்ந்த வகிபங்கை ஆற்றும் என்பது மறுதலிக்க முடியாத உண்மை. இதற்குத் தக்கசான்றுகள் உண்டு. திரு விழாக் காலங்களில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குச் செல்லுகின்ற அடியவர்களின் எண்ணிக்கையைக் கண்டு , அங்கு கடமையில் இருக்கும் காவல்துறையினர் விறைத்துப் போவர்.
இத்துணை மக்கள் கூட்டம் எப்படி ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்தது என்று அதிசயிப்பர் . இதையும் கடந்து , முருகன் மீது அடியவர் கள் கொண்டுள்ள பக்தி நிலையும் வெளிப்படுத்தப்படுகிறது.
இதேபோல் சிவராத்திரி விரதத்தில் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் கூடுகின்ற. இலட்சக்கணக்கான அடியவர்களால் , அந்த ஆலயத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்குச் செல்லுகின்ற அடியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் , ஆலயத்தின் நிலப்பரப்பைக் கபளீகரம் செய்வதிலும் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரைகளை அமைப்பதிலும் பேரினவாத சக்திகள் தீவிரம் காட்ட , அதற்குத் தொல்லியல் திணைக்களமும் துணை போகிறது.
உண்மையில் தொன்மைமிகுந்த எமது வரலாற்றுத் தலங்களை பாதுகாக்க வேண்டு மாயின் , அதற்கான ஒரே வழி குறித்த ஆல யங்களுக்கு அடியவர்கள் சென்று வழிபடு வதை ஊக்குவிக்க வேண்டும் .
அந்த வகையில் இந்த நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் அடியவர்கள் திருக்கோணேஸ்வரத்துக்குத் தல யாத்திரை மேற்கொள்வது அவசியம் . இத்தல யாத்திரையை சைவ அமைப்புகள் மற்றும் சைவத் தொண்டர்கள் ஊர்தோறும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம் – 19.09.2022