இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு தொடரும் !!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு இனி நிதியுதவி கிடைக்காது என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்காக இந்தியா இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு சுமார் 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு உடனடி ஆதரவு வழங்குமாறு பல தரப்பினரிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஊழியர் மட்ட உடன்படிக்கையை சுட்டிக்காட்டிய இந்திய உயர்ஸ்தானிகராலயம், சர்வதேச நாணய நிதியத்துடனான மேலதிக இணக்கப்பாடுகள் மற்றும் இலங்கையின் கடன் நிலையை பொறுத்தே நிதியுதவி தொடர்பான தீர்மானங்கள் அமையும் எனவும் தெரிவித்துள்ளது.