யூரியா குறித்து அமைச்சர் அமரவீரவின் அறிவிப்பு !!
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆறு மாவட்டங்களில் பெரும்போக செய்கையில் ஈடுபடுவோருக்கு தேவையான யூரியாவை விரைவாக பெற்றுக்கொடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சினால் இன்று (20) விடுக்கப்பட்ட அறிக்கையில், அமைச்சரால் மேற்குறிப்பிட்ட விடயம் குறித்து அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் விவசாய நிலையங்களுக்கு யூரியாவை வழங்கி, உரத்தை இலகுவாக கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் யூரியா உர மூடை, 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
தேயிலை மற்றும் சோளம் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் யூரியா உர மூடையை 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.