எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் உள்ளன: மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த புதின்..!!
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது.
இந்த பின்னடைவு ரஷியாவின் தோல்விக்கான அறிகுறியாக மேற்கத்திய நாடுகள் கட்டமைத்து வருகின்றன. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 2-ம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷிய ராணுவ அணி திரட்டல் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாட்டு மக்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி வாயில் நிகழ்த்திய உரையில், ‘ரஷிய ராணுவத்திற்கான அணி திரட்டல் இன்று முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சி பெற்று தற்போது வேறு பணிகளில் உள்ள நாட்டு மக்கள் ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் ராணுவ நடவடிக்கையை ரஷியா மண்ணில் மேற்கொள்ள உக்ரைனை தள்ளுகின்றன.
மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். பதிலடி கொடுக்க எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) உள்ளன. அவை நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை. எங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்.
இது ஒன்றும் மழுப்பல் அல்ல’ என்றார். நாட்டு மக்களிடம் புதின் பேசிய சில நிமிடங்களில் ராணுவ அணி திரட்டலில் 3 லட்சம் பேர் படையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணு ஆயுத எச்சரிக்கை மட்டுமின்றி உக்ரைன் மீதான போரை ரஷியா தீவிரப்படுத்த உள்ளது. இந்த அச்சுறுத்தலால் உக்ரைன் – ரஷியா இடையேயான போர் முடிவின்றி தொடர்ந்து அதிக உயிரிழப்புகளையும், பாதிப்பையும் ஏற்படுத்த வழிவகுத்துள்ளது.