பரோலில் அனுப்பப்பட்டவர்களில் 19 சதவீத கைதிகள் சிறைக்கு திரும்பவில்லை- டெல்லி சிறை நிர்வாகம் தகவல்..!!
டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி ஆகிய 3 முக்கிய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவின் முதல் அலை தாக்க தொடங்கியபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
அந்தவகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 3 சிறைகளில் இருந்தும், 5,525 கைதிகள் இடைக்கால ஜாமீன் மற்றும் அவசர பரோல் மூலம் விடுவிக்கப்பட்டனர். இதில் 19 சதவீதத்துக்கும் அதிகமான கைதிகள், அதாவது 1,063 கைதிகள் இன்னும் சிறைக்கு திரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட கேள்விக்கு மேற்கண்ட சிறை நிர்வாகம் அளித்த பதில் மூலம் இது தெரிய வந்துள்ளது. அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-வது அலையின்போது விடுவிக்கப்பட்ட கைதிகள் கோர்ட்டின் அடுத்த உத்தரவு வந்த பின்னரே சரணடைய முடியும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.