சுப்ரீம் கோர்ட்டில் 27-ந்தேதி முதல் முக்கிய வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு..!!
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற மறுநாளிலேயே 25 அரசியல் சாசன அமர்வுகளை அமைத்தது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைகளை வரும் 27-ந் தேதி முதல் நேரடி ஒளிபரப்பு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
ஒரு மனதாக எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, முதலில் யூ டியூப் சேனலில் வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நடைபெறுகிற சில குறிப்பிட்ட வழக்குகள் அல்லது அரசியல் சாசனம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணைகள் முன்னோடி திட்டமாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல்சாசன அமர்வு முன் நடைபெறும் விசாரணையை நேரலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.
நேரடி ஒளிபரப்புக்காக சம்மந்தப்பட்ட கோர்ட்டு முதலில் எழுத்துபூர்வமாக தெரிவித்து அனுமதி பெற்று உரிய நடைமுறைப்படி உறுதி செய்து கொள்ள வேண்டும் என தகவல்கள் கூறுகின்றன. “2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த ஒரு தீர்ப்பில், வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று கூறியதை அமல்படுத்துவதற்கான முதல் படி இது” என்று நீதிபதிகள் ஒருமித்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் தற்போது, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கதா என்பது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வின் முன் நிலுவையில் இருப்பதுவும், இது போன்ற பல வழக்குகள் அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட்டில் 4 நீதிபதிகள் பதவிக்கான காலி இடங்களை நிரப்புவதை இறுதி செய்வது தொடர்பாகவும் நீதிபதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் இதில் 4 நீதிபதிகளின் பெயர்களை இறுதி செய்ய முடியவில்லை எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.