திருப்பி அனுப்பியது திரிபோஷ !!
போஷாக்கு உணவான திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட சோளம் அடங்கிய கொள்கலன்களில் அஃப்ளடொக்சின் எனப்படும் பூஞ்சை மிகையாக காணப்பட்ட காரணத்தினால், 13 கொள்கலன்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரியொருவர், இன்று (22) தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்தில் தனியார் இறக்குமதியாளர்களின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 260 மெற்றிக் தொன் சோளத்தில் குறித்த பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டவுடன் அவை திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
திரிபோஷ உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆய்வக பரிசோதனையின் போதே அஃப்ளடொக்சின் அதிகமாக காணப்பட்டமை தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.
திரிபோஷவின் தரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே, அஃப்ளடொக்சின் அதில் அடங்கியிருந்தமை கண்டறியப்பட்டதாகத் தெரிவித்த அந்த அதிகாரி, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷ பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, திரிபோஷ குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் திரிபோஷ நிறுவனத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்று அதன் தலைவரினால் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷ பொதிகளை பெற்றுக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமலீ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.