உத்தர பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை- 10 பேர் உயிரிழப்பு..!!
உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்நிலையில் மழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுதல், வீடு இடிந்து விழுதல், இடிமின்னல் போன்ற விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 11 பேர் காயமடைந்துள்ளனர்.
அலிகர் மாவட்டத்தில் மூன்று நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பதால், சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 140 மி.மீ மழை பதிவானதாக எட்டாவா வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆக்ராவிலும் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.