;
Athirady Tamil News

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்: மின்விளக்கு, மலர் அலங்காரப் பணிகள் நடந்து வருகிறது..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று பரவல்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி சாமி வீதி உலா கோவிலுக்கு உள்ளேயே நடந்தது. பிரம்மோற்சவ விழாவில் சாமி வீதி உலாவை காண முடியாமல் பக்தர்கள் விரக்தி அடைந்த நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.

பிரம்மோற்சவ விழா நடைபெறும் நாட்களில் காலை இரவு என இரண்டு வேளையும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தை யொட்டி ஏழுமலையான் கோவில் மற்றும் வெளிப்பிரகாரம் அங்குள்ள பூங்காக்கள் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் சாமி வீதி உலா நடைபெறும் தங்கத்தேர், மரத்தேர், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் தூய்மைப்படுத்தப் பணிகள் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட விதவிதமான மலர்கள், பழங்கள், காய்கறிகள் கொண்டு கோவில் அலங்காரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவிற்கு 4 நாட்களே உள்ளதால் திருமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பக்தர்களை கட்டுப்படுத்தி தரிசனத்திற்கு அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் நேற்று 74, 817 பேர் தரிசனம் செய்தனர். 33,350 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.97 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.