பஞ்சாப்: ஆளுநர் மாளிகை நோக்கி ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பேரணி..!!
பஞ்சாப் மாநிலத்தில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பாஜக செயல்படுத்த முயற்சிப்பதாகவும், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜகவின் முயற்சியை முறியடிக்கும் வகையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பகவந்த் மான் முடிவு செய்தார். இதற்காக இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் கூட்டத்தொடருக்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திரும்பப் பெற்றார். ஆளுநரின் இந்த நடவடிக்கையால் ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் ரத்து செய்ததற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பாகவே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து எம்எல்ஏக்கள் அனைவரும் அந்த இடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.