;
Athirady Tamil News

திருப்பதி பிரம்மோற்சவ விழா: 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதி..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் மின்னொளியில் ஜொலிக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை காண்பதற்காக 4 மாட வீதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிவார்கள். திருமலையில் 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இடவசதி உள்ளது. எனவே பிரம்மோற்சவ விழாவின் போது கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

கூடுதலாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் திருப்பதியில் நிறுத்திவிட்டு திருமலைக்குச் செல்லும் அரசு பஸ்களில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கருட சேவைக்கு முந்தின நாளான 30-ந் தேதி மதியம் 2 மணி முதல் 2-ந் தேதி இரவு வரை திருமலைக்கு பைக்கில் செல்ல அனுமதி இல்லை.

உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பைக்கில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பைக்கை திருப்பதியில் நிறுத்திவிட்டு அரசு பஸ்சில் சென்று சாமியை தரிசனம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் நேற்று 65,187 பேர் தரிசனம் செய்தனர். 27,877 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.5.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.