காங்கிரஸ் தலைவர் தேர்தல்: விரைவில் மனுதாக்கல் செய்வேன்- அசோக் கெலாட் தகவல்..!!
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17- ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு மாநில காங்கிரஸ் சார்பில் இதற்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.
என்றாலும் தலைவர் பதவியை ஏற்க ராகுல் கடைசி வரை திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் சோனியா, ராகுல் சார்பில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நிறுத்தப்படுகிறார். தலைவர் தேர்தலில் போட்டியிட முதலில் தயங்கிய அவர் பிறகு சம்மதித்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது. அவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் களம் இறங்க உள்ளார்.
இது தொடர்பாக அசோக் கெலாட் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்குமாறு ராகுல்காந்தியை நாங்கள் பல தடவை வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தனது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரும் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். விரைவில் நான் மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். மனு தாக்கல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறலாம். தனிப்பட்ட முறையில் நான் யாரையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை.
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றாலும் ராஜஸ்தான் அரசியலுடன் தொடர்ந்து பயணிக்கவே நான் விரும்புகிறேன். இதுபற்றி காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் காங்கிரஸ் தலைவராக வருபவர் அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தி உள்ளார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதிலும் ராகுல் உறுதியாக கருத்து தெரிவித்து உள்ளார்.
ராகுலின் கருத்துப்படி பார்த்தால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க நேரிடும். அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் புதிய முதல்-மந்திரியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது துணை முதல்-மந்திரியாக இருக்கும் சச்சின் பைலட் புதிய முதல்-மந்திரியாக அதிக வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு பிரியங்கா ஆதரவு தெரிவித்து உள்ளார். இதற்கிடையே சில மூத்த மந்திரிகளும், சபாநாயகரும் முதல்-மந்திரி பதவியை விரும்புகிறார்கள். இதனால் ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.