கேரளாவில் இன்று முழு அடைப்பு- அரசு, தனியார் பஸ்கள் மீது கல்வீச்சு..!!
இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து இந்த அமைப்பை சேர்ந்த சுமார் 106 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் மட்டும் 22 பேர் கைதானார்கள்.
இதனை கண்டித்தும், கைதானவர்களை விடுதலை செய்யக்கோரியும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. கேரளா முழுவதும் இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. திடீரென போராட்டம் நடத்தப்பட்டதால் வெளியூர்களில் இருந்து ஊர் திரும்பியவர்கள், வீடு திரும்ப முடியாமல் அவதிபட்டனர். இதற்கிடையே அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. சில பகுதிகளில் பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசினர். இதனால் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறந்திருந்தன. முழு அடைப்பு காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் மாநில எல்லையுடன் நிறுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பஸ்கள் மாநில எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது. இதுபோல கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்களும் பாலக்காடு எல்லையுடன் நிறுத்தப்பட்டது.