ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு இன்று ஓய்வு- மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை..!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை இப்போது கேரளா மாநிலத்தில் நடக்கிறது.
நேற்று எர்ணாகுளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி இரவு சாலக்குடியில் நிறைவு செய்தார். சாலக்குடியில் தொண்டர்களுடன் தங்கிய ராகுல் காந்தி. 2-வது முறையாக பாத யாத்திரைக்கு இன்று ஓய்வு கொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 15-ந்தேதியும் அவர் பாத யாத்திரைக்கு ஓய்வு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை அவர் ஓய்வெடுத்தபோது பாதயாத்திரையால் அவரது கால்களில் கொப்புளம் ஏற்பட்டதால் அவர் ஓய்வெடுத்தார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் ஓய்வு எடுப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் குறித்து ஆலோசிக்கவே என்று கூறப்படுகிறது. இன்றைய ஓய்வின்போது அவர் டெல்லி சென்று சோனியாவை சந்திப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் இன்று காலை வரை அவர் கேரளாவின் சாலக்குடியிலேயே தங்கி இருந்தார். அவருடன் மாநில மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர். அவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சி தலைமை பதவி குறித்த ஆலோசனையே நடந்தது என்று கூறப்படுகிறது.