யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பிரதேச செயலகங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரத் தரவுகளின்படி சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகள் இனங்காணப்பட்டு, சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் பாடசாலையில் இடைவிலகல் ஏற்படுவதற்கு போக்குவரத்து, வறுமை காரணங்களாக அமைவதுடன், கட்டாயக் கல்விக் குழுக்களை உருவாக்குதல், கிராமிய மட்ட சிறுவர் குழுக்களை வலுப்படுத்தல், சிறுவர் அபிவிருத்தி குழுக்களின் ஊடாக கண்காணிப்புக்களை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டது.
அத்தோடு, தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கும், முடிவடையும் நேரங்களில் பொலிஸார் நடமாடும் சேவையில் ஈடுபட்டு கண்காணித்தல் வேண்டுமென குறிப்பிடப்பட்டது.
மேலும், மாவட்ட பதிவாளர் திணைக்களத்தின் மூலம் பிறப்புப் பதிவு இல்லாத சிறுவர்களிற்கு எதிர்வரும் ஐப்பசி மாதம் பத்தாம் திகதி விஷேட நடமாடும் சேவையினை மேற்கொள்ளுவதோடு, அதற்கிடைப்பட்ட காலப்பகுதியில் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் பிறப்புப் பதிவு தொடர்பாக பொருத்தமான ஆவணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே வளமான சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சமூக நலன்விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் என அனைவரும் ஒருமித்து செயற்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், வட மாகாண நன்னடத்தை பராமரிப்பு திணைக்கள ஆணையாளர், வட பிராந்திய மனித உரிமை ஆணையாளர், உதவி பொலிஸ் அத்தியட்ஷகர், தாய் நல சேய் மருத்துவ அதிகாரி, உதவி பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி திணைக்கள பிரதிநிதிகள், பொலிஸார், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுவர் தொடர்பான அதிகாரிகள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”