அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம் !!
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மற்றும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இழப்பீடுகளுக்கான அலுவலகத்துடன் இணைந்து நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்ச ஆரம்பித்துள்ளது. அதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவானது நாடு திரும்பியவர்களுக்கு உரிய ஆவணங்களை தாமதமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
• ஆவண ஆதாரங்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் பங்களிப்புடன் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாணத்தில் நடமாடும் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தல்.
• தற்போது கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தால் கையாளப்படும் குடியுரிமை பெறுவது தொடர்பான ஆவணங்களை மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்றுக்கொள்வது.
• அகதிகள் இந்த ஆவணங்களில் சிலவற்றைச் சமர்ப்பிப்பது கடினமாக இருப்பதால், குடியுரிமையைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியலைத் திருத்துதல்.
• சான்றிதழைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அபராதத் தொகையை ரத்து செய்தல் மற்றும் குறைத்தல் ஆகிய பணிகளை முன்னெடுக்க இந்த குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.