புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது- பிரதமர் மோடி..!!
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர்களின் தேசிய மாநாட்டை நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது: பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, அதே நேரத்தில் சுற்றுச்சூழலையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றங்களை எட்டியுள்ளதுடன், உலகின் பிற நாடுகளுக்கும் வழிகாட்டுகிறது.
இன்றைய புதிய இந்தியா, புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. நமது காடுகளின் பரப்பளவு அதிகரித்து உள்ளதுடன், ஈரநிலங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன. தனது கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றியதன் காரணமாக இன்று உலகமே இந்தியாவுடன் இணைந்துள்ளது. நாட்டின் கவனம் பசுமை வளர்ச்சி மற்றும் வேளாண் துறை சார்ந்த பணிகளில் உள்ளது. இயற்கையுடன் சமநிலையை பேண வேண்டியதன் இலக்குகளை அடைவதில் மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சகங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. தண்ணீர் அதிகம் உள்ள மாநிலங்களும் தற்போது தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.
ரசாயனமற்ற இயற்கை விவசாயம், நீர்நிலைகள் மற்றும் நீர் பாதுகாப்பு போன்ற சவால்கள் தனிப்பட்ட துறைகளுக்கு மட்டுமானதல்ல. சுற்றுச்சூழல் துறையும் அவற்றை சமமான அழுத்தமான சவாலாக கருத வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் காட்டுத் தீயை அணைக்கும் செயல்முறையானது தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், வலுவானதாகவும் இருக்க வேண்டும். நமது வனக் காவலர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் காட்டுத் தீயை அணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.