யாழில். மதுபானம் ,மாவாவுடன் கைதான மாணவர்கள் – கடுமையாக எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார்!
யாழ். நகர் பகுதியில் மது மற்றும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை நான்கு மாணவர்களை கடுமையாக எச்சரித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஒப்படைத்துள்ளார்.
பிறவுண் வீதியில் உள்ள ஆலயத்திற்கு அருகில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.
அங்கு இருந்த நான்கு மாணவர்களில் ஒரு மாணவன் “மாவா” போதைப்பாக்குடனும் ஏனைய மூன்று மாணவர்கள் மதுபாணத்துடனும் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் , யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் முன் முற்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்த வேளை , யாழில் உள்ள பிரபல பாடசாலையில் க.பொ. த உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் தனியார் கல்வி நிலையத்திற்கு மேலதிக வகுப்புக்காக வந்து , நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டமாக மது அருந்தியதாக தெரிவித்துள்ளனர்
அதனை அடுத்து மாணவர்களை கடுமையாக எச்சரித்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர், மாணவர்களின் பெற்றோரை அழைத்து , மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாது விடுவிப்பதாகவும் , பிள்ளைகளை கண்காணித்து அவர்களை ஒழுக்கமான பிள்ளைகளாக வளருங்கள் என எச்சரித்து மாணவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”