;
Athirady Tamil News

சுட்டுக் கொல்லப்படலாம் என அச்சம்… மியான்மரில் உயிர் பயத்தில் தவிக்கும் இந்திய பிணைக் கைதிகள்..!!

0

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 60 பேர் உள்பட 300 இந்தியர்கள் முகவர்கள் மூலம் தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை ஒரு கும்பல் தாய்லாந்தில் இருந்து மியான்மர் நாட்டுக்கு கடத்தி சென்றனர். அங்கு பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை குற்ற செயல்களில் ஈடுபடுமாறு சித்ரவதை செய்கிறார்கள் என்று தகவல் வெளியானது.

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் தங்களை காப்பாற்றுமாறு வீடியோ வெளியிட்டதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்லாந்து மற்றும் மியான்மர் அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிணை கைதிகளாக உள்ள இந்தியர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
மியான்மரின் மியாவாடி பகுதியில் எங்களை அடைத்து வைத்து குற்ற செயல்களில் ஈடுபடுமாறு சித்ரவதை செய்கிறார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நாடுகளில் இருந்து போலி இ-மெயில் குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுவதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

கடத்தல் கும்பல் சொல்வதை செய்ய மறுப்பவர்கள் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொடுமைப் படுத்துகிறார்கள். தினமும் 16 மணி நேரம் வேலை பார்ப்பதுடன் சரியாக உணவும் கொடுப்பதில்லை.

எங்களை அடிமைப்படுத்தி குற்றவாளியாகவும் ஆக்கியுள்ளனர். இந்த விவகாரம் வெளியே கசிந்ததால் எங்களை வேறு இடங்களுக்கு மாற்றவும் அதிக வாய்ப்புள்ளது.

இங்கிருந்து தப்ப நினைப்பவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களது உடல் பாஸ்போர்ட்டுடன் தாய்லாந்து எல்லையில் வீசப்படும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டுகிறார்கள். 24 மணி நேரமும் துப்பாக்கி முனையில் இருப்பதால் நாங்கள் சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பயத்தில் இருக்கிறோம்.

அதற்கு முன்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து எங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.