பா.ஜனதா ஆதரவாளரின் கார்களுக்கு நள்ளிரவில் தீ வைப்பு- 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு..!!
தமிழகத்தில் பா.ஜனதா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற்றது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சில அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்திலும் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வரும் பா.ஜனதா ஆதரவாளர் மனோஜ்குமார் என்பவரின் கார்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது. டாக்டர் மனோஜ்குமார் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். அவரது வீடும் அங்குதான் உள்ளது. நேற்று இரவு மனோஜ்குமார் தனது 2 கார்களை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் அவரது கார்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இதில் 2 கார்களும் தீ பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள், டாக்டர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வெளியில் வந்த அவர் கார்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். இதில் கார்கள் சேதம் அடைந்துள்ளது. இதுபற்றி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பா.ஜனதா ஆதரவாளர் கார்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது, 3 பேர் கும்பல் கார்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக டாக்டர் மனோஜ்குமார் கூறும்போது, நான் நேற்று இரவு எனது கார்களை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தேன். இந்த நிலையில் நள்ளிரவில் கார்கள் தீப்பற்றி எரிவதாக தெரிவித்தனர். உடனடியாக கார்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தோம்.
இருந்தபோதிலும் கார்கள் சேதமாகி உள்ளன என்றார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரத்தில் பா.ஜனதா ஆதரவாளர் கார்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ராமநாதபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.