;
Athirady Tamil News

வீட்டுக் காவலில் சீன அதிபர் ஜி ஜின்பிங்? சமூக வலைத்தளத்தில் பரவும் செய்தியால் பரபரப்பு..!!

0

வடக்கு எல்லையில் சீன படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் வணிகப் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால், ஜி ஜின்பிங்கின் கைது பற்றிய தகவல்கள் பெய்ஜிங்கிலும் உலகளாவிய இணையத்திலும் பரவுகின்றன.

சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை தரையிறக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நியூஸ் ஹைலேண்ட் விஷனின் மற்றொரு தகவலில் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதி, பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் ஊடகங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

எனினும், இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகத்திலோ இன்னும் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனினும், சீன அரசியலில் இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். “புதிதாக பரவும் வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும்: ஜி ஜிங்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா? ஜி ஜின்பிங் சமீபத்தில் சமர்கண்டில் இருந்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கட்சியின் ராணுவப் பொறுப்பில் இருந்து ஜியை நீக்கியதாகக் கருதப்படுகிறது. அதன்பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் வதந்தி பரவுகிறது” என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு சிலர் பதில் அளித்து, தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.