எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பம் முக்கியமானது- உள்துறை மந்திரி அமித்ஷா..!!
பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்திய-நேபாள எல்லை பகுதிகளை ஆய்வு செய்தார். பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து, பணியாளர்களுடன் சிற்றுண்டி அருந்திய அவர், அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது துணிச்சலான பாதுகாப்பு வீரர்களின் வசதிகள் மற்றும் நலன்களை கவனித்துக்கொள்வது நமது பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட அத்தகைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், நியாயமான தேர்தலை நடத்துவதிலும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஆயுதப் படை வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பை நமது நாடு என்றும் மறக்காது.
எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே ஒரே நாடு,ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.