;
Athirady Tamil News

சரித்திர புகழ்பெற்ற மைசூரு தசரா விழா: ஜனாதிபதி நாளை தொடங்கிவைக்கிறார்..!!

0

சரித்திர புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ள மைசூருவில் பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ைமசூரு தசரா வரலாறு

இந்தியாவில் கர்நாடக மாநிலத்திற்கு சிறப்பு சேர்ப்பது மைசூரு தசரா விழாதான். சரித்திர புகழ்பெற்ற தசரா விழா கர்நாடக மாநிலத்தின் ஒரு அடையாளமாகவும் விளங்குகிறது. இந்த தசரா விழாவிற்கு என்று பல்வேறு சிறப்புகள், வரலாறுகள் உண்டு. முன்னொரு காலத்தில் மைசூருவை ஆண்ட மகிஷாசூரன் எனும் மன்னன் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். மக்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி வந்தான். அவனது ஆட்சியின் கீழ் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது. கொடுமையான ஆட்சியில் இருந்து தங்களை காப்பாற்றும்படி மக்கள் அனைவரும் சாமுண்டீஸ்வரியை வேண்டினர். மக்களின் தீராத வேதனையை போக்குவதற்காக சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வதம் செய்தார். அவர் விஜயதசமி நாளன்று மகிஷாசூரனிடம் போரிட்டு அவனை அழித்தார். சாமுண்டீஸ்வரி அம்மனின் அந்த வெற்றிக் கொண்டாட்டத்தையே மைசூரு மக்கள் தசரா விழாவாக கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மகிஷாசூரன் என்ற பெயரே பின்னர் ‘மகிசூர்’ என்றும் அதன்பிறகு ‘மைசூரு’ என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழா 14-ம் நூற்றாண்டில் விஜயநகரை ஆண்ட மன்னரால் ‘மகாநவமி’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அரண்மனை குடும்பத்தினரால்…

ஆனால் 1610-ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணாவை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த உடையார் வம்சத்தினர் தசரா விழாவின் பெருமைகளை அறிந்து ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர் என்று வரலாறு கூறுகிறது. பின்னர் காலப்போக்கில் மைசூருவை தலைமையிடமாகக் கொண்டு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யது வம்சத்தின் மன்னர்களான நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் தொடங்கி ஜெயசாம ராஜேந்திர உடையார் காலம் வரை தசரா விழாவும், ராஜா தர்பாரும் வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்பட்டு வந்தது. 1974-ம் ஆண்டு ஜெய சாமராஜ உடையார் மரணம் அடைந்தார். அதன்பிறகு கர்நாடக அரசால் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா வெகுவிமரிசையாகவும், ஆடம்பரமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் நாளன்று தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 9 நாட்கள் இரவில் பூஜைகள் செய்யப்பட்டு விஜயதசமி நாளன்று ஜம்புசவாரி ஊர்வலத்தோடு முடிவடையும். ஜம்புசவாரி ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை யானைகள் புடை சூழ ஊர்வலத்திற்கு தலைமை வகிக்கும் யானை கம்பீர நடைபோட்டு சுமந்து வரும் காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இப்படி பல்வேறு சிறப்புமிக்க இந்த தசரா விழா உலக புகழ்பெற்று திகழ்கிறது. இந்த ஆண்டு கொண்டாடப்படுவது 412-வது தசரா விழாவாகும்.

நாளை தொடக்கம்
இந்த ஆண்டு மைசூரு தசரா விழா நாளை (திங்கட்கிழமை) சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்க உள்ளது. நாளை தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் தசரா விழா நடக்கிறது. கொேரானா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மைசூரு தசரா விழா அரண்மனை வளாகத்திலேயே எளிமையாக கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், வெகுவிமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.36 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. இந்த ஆண்டு தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 14 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி, பீரங்கி குண்டு வெடி சத்தம் கேட்கும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஒவ்வொரு ஆண்டும் மைசூரு தசரா விழாவை கவிஞர்கள், எழுத்தாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களை வைத்து தொடங்கி வைப்பது வழக்கம். இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கிவைப்பது இதுவே முதல் முறையாகும். நாளை காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாமுண்டி மலைக்கு செல்கிறார்.

பின்னர் காலை 9.45 முதல் காலை 10.05 மணிக்குள் ரசிகா லக்கனத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ள தேரில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். முன்னதாக அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்ய உள்ளார். அவருடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பிரகலாத் ஜோஷி உள்பட 7 மத்திய மந்திரிகள், மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், கலெக்டர் பகாதி கவுதம், மேயர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானம் மூலம் தார்வாருக்கு செல்கிறார்.

தனியார் தர்பார்

தசரா விழாவையொட்டி நஜர்பாத்தில் உள்ள குப்பண்ணா பூங்காவில் நாளை (திங்கட்கிழமை) மலர் கண்காட்சி தொடங்குகிறது. நாளை முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதனை தொடர்ந்து இளைஞர் தசரா, விவசாய தசரா, உணவு மேளா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக தொடங்க உள்ளது. மேலும் நாளை காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் மைசூரு அரண்மனையில் மன்னர் குடும்பத்தினர் சார்பில் தனியார் தர்பார் தொடங்க உள்ளது. அன்றைய தினம் காலை 5 மணிக்கு மன்னர் யதுவீருக்கு காப்பு கட்டி, அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சிறப்பு பூஜை நடக்கிறது. பின்னர் அரண்மனையில் கணபதி ஹோமம், சண்டிகா ஹோமம் நடக்க உள்ளது.

இதையடுத்து தர்பார் ஹாலில் இருக்கும் நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்துக்கு மன்னர் யதுவீர் சிறப்பு பூஜை செய்கிறார். அதன்பின்னர் காலை 10 மணி முதல் காலை 10.30 மணிக்குள் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை மற்றும் தசரா விழாவையொட்டி மைசூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மைசூருவில் தசரா விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் மக்கள் பிரமிக்கும் வகையில் நகரம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை, அரசு அலுவலகங்கள், பழமையான கட்டிடங்கள் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. இதனால் மைசூரு நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.