மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்)
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஸ்வின் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றதுடன், அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அஸ்வின், வலம்புரி, சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் தனக்கான முத்திரிகைகளை பதித்துள்ளார். அதேவேளை வீரகேசரியின் யாழ்.ஓசை பதிப்பின் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
இதில் இவர் எழுதிய கேட்டியளே சங்கதி என்ற பத்தி எழுத்து பல இடங்களிலும் எதிரொலித்தது. அந்த எழுத்துகள் ஓர் மௌனப் புரட்சியையும் செய்தது. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் சிறந்த ஊடகவியலாளர் விருதை கேட்டியளோ சங்கதி பத்திக்காக வழங்கிக் கௌரவித்தது.
இறுதியாக தினக்குரல் பத்திரிகையில் இவர் வரைந்த கருத்தாழமிக்க கார்ட்டூன்கள் வாசகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் பேசவைத்தது. அவரது காட்டூன்கள் பல இன்றை காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசன ஓவியங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”