;
Athirady Tamil News

வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

0

‘தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற தகவல் வெளியானது. இது அவர்களது குடும்பங்களை பதற வைத்துள்ளது. இந்த மியாவாடி பகுதி, மியான்மர் அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை.

அங்கு சில இன ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மியாவாடியில் சிக்கித் தவிக்கிறவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தில், வெளிநாட்டு வேலை என நம்பிச்செல்கிறவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தாய்லாந்து நாட்டில் டிஜிட்டல் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரிகள் பணியிடங்களில் அமர்த்துவதாகக்கூறி, இந்திய இளைஞர்களை கால்சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈர்த்து, வேலை மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவது பாங்காக் மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

இதில் தகவல் தொழில்நுட்பத்துறையில் திறன் மிக்கவர்கள், தாய்லாந்தில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை என கூறி சமூக ஊடக விளம்பரங்களாலும், துபாய் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஏஜெண்டுகள் மூலமாகவும் ஏமாற்றப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சட்டவிரோதமாக எல்லை தாண்டி பெரும்பாலும் மியான்மருக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும், கடுமையான நிலைமைகளின்கீழ் பணிபுரிய அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு காரணங்களுக்காக சுற்றுலா/ விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பாக, இந்திய குடிமக்கள் வேலைக்கு அமர்த்துகிற வெளிநாட்டு நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு ஏஜெண்டுகள் மூலமாக சரி பார்க்க வேண்டும். வேலை தருகிற எந்தவொரு நிறுவனத்தைப்பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும் அதில் ஏற்கனவே வேலைக்கு சேர்ந்தவர்களை நாடி தகவல்களை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.