ராகுல்காந்தி யாத்திரை- கேரள நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேச ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் பாதயாத்திரை சென்ற அவர், கடந்த 11-ந் தேதி கேரள மாநிலம் சென்றார். அங்கு தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ராகுல் காந்தி பாதயாத்திரை சென்று வருகிறார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
பாதயாத்திரையின்போது 2 முறை ஒவ்வொரு நாள் ஓய்வு எடுத்த ராகுல் காந்தி, 17-வது நாளாக இன்று காலை தனது பாதயாத்திரையை தொடர்ந்தார். திருச்சூர் மாவட்டம் திரூர் பகுதியில் இருந்து காலை 6.30 மணிக்கு அவர் பாதயாத்திரையை தொடங்கினார்.
பல்வேறு தரப்பு மக்களும் ராகுல் காந்தியை பூக்கள் தூவி வரவேற்றனர். பகல் 10 மணிக்கு வடக்கஞ்சேரி தூய சவேரியார் ஆலயத்தில் அவர் பாதயாத்திரையை முடித்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.
மாலை 4.45 மணிக்கு அங்கிருந்து அவர் பாதயாத்திரை தொடங்குகிறார். இரவு 7 மணிக்கு வெட்டிக்கட்டிரி பகுதியில் பாதயாத்திரையை முடிக்கும் அவர் செருத்துருத்தி தனியார் பொறியியல் கல்லூரியில் தங்குகிறார்.