திருப்பதி அருகே ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து- டாக்டர், மகன், மகள் பலி..!!
ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த ரேணிகுண்டா பகத்சிங் காலணியில் டாக்டர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் புதியதாக 4 மாடிகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டியுள்ளார். ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் ரவிசங்கர் ரெட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ஆஸ்பத்திரியில் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடையவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு ஆஸ்பத்திரியின் 4-வது மாடி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அதிகாலை நேரம் என்பதால் டாக்டர் குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீ மளமளவென 4-வது மாடி முழுவதும் பரவியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் தீ விபத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்து காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். அருகில் இருப்பவர்கள் தீ விபத்தை கண்டு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஏணிகள் மூலம் நான்காவது மாடிக்கு சென்று தீயில் சிக்கிய 2 பேரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 பேரை உடனடியாக மீட்க முடியவில்லை. தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன்பிறகு வீட்டிற்குள் சிக்கி இருந்த டாக்டர் ரவிசங்கர் ரெட்டி அவரது மகன் சித்தார்த்தரெட்டி மகள் கீர்த்திகா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுகுறித்து ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் சிக்கி டாக்டர் மற்றும் அவரது மகன், மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.