திருப்பதி பிரம்மோற்சவம்: தர்ப்பை பாய், கயிறு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதற்காக, பயன்படுத்தப்படுகின்ற தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை அதிகாரி ஏ.சீனிவாசலு மற்றும் பணியாளர்களால் தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு ேநற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன.
கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உள்ள சேஷ வாகனத்தின் மீது தர்ப்பைப் பாய், கயிறு ஆகியவற்றை வைத்தனர். இதையடுத்து தர்ப்பைப் பாய், கயிறு ஆகியவற்றுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை கொடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படும். தங்கக்கொடி மரத்தில் தர்ப்பைப் பாயை சுற்றுவார்கள். அதில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகையான தர்ப்பைகள் உள்ளன. அதில் திருமலையில் விஷ்ணு தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை ஊழியர்கள் விஷ்ணு தர்ப்பை புற்களை சேகரித்தனர். அந்தப் புற்களை திருமலைக்குக் கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தினர். தர்ப்பை உலர்ந்ததும், நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு ஆகியவற்றை தயார் செய்தனர். 22 அடி நீளம், 7½ அடி அகலத்தில் தர்ப்பைப் பாய், 200 அடி நீளத்தில் தர்ப்பை கயிறு ஆகியவற்றை தயார் செய்துள்ளனர். அவை 2-ம் 27-ந்தேதி கொடியேற்றம் அன்று பயன்படுத்தப்படுவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.