;
Athirady Tamil News

குழந்தைகளுக்கு 1 வயது வரை… உணவில் கவனம் தேவை..!!

0

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

0-4 மாதம் வரை
தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை
நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில், கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.

அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒருடேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை
இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதே, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகிவற்றை கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

8-10 மாதம் வரை
இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.

10-12 மாதம்
இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். அளவாக இருக்க வேண்டும். உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால்பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.