19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுகாதார அட்டை தயாராகி உள்ளது- மன்சுக் மாண்டவியா..!!
அனைவருக்கும் ஆரோக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் ஆரோக்கிய மந்தன் என்ற திட்டத்தை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார், நித்தி ஆயோக் உறுப்பினர் வினோத் பால், உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் எஸ் சர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, மிகப்பெரிய உலகளாவிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மிக முக்கியமான பங்குதாரர்களாக இந்த திட்டத்தின் பயனாளிகள் இருப்பதாக கூறினார்.
நாட்டில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் 24 கோடிக்கும் அதிகமான சுகாதார அட்டை எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நாட்டின் சுகாதார பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு முக்கிய மைல் கல் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், நாட்டில் சுகாதார சேவை கிடைப்பதில் பணக்காரர், ஏழைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.