பாஜக மட்டுமே தேசியக் கட்சி…மற்ற கட்சிகள் மாநில கட்சிகளாக சுருங்கி விட்டன- ஜே.பி.நட்டா..!!
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் டெல்லியில் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநில கோட்டயத்தில் பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கூறியுள்ளதாவது:
அரியானாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தேவிலால் பிறந்த நாளைக் கொண்டாட அனைவரும் ஒன்று கூடினர். அவர்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) இரண்டு விஷயங்கள் பொதுவானவை. ஒன்று, அவை அனைத்தும் குடும்ப அரசியல் செய்பவை. இரண்டாவது எதிர்க்கட்சிகள் ஊழலில் மூழ்கியுள்ளன.
அவர்களில் சிலர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர், மேலும் சிலர் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குடும்ப அரசியல் கட்சிகள் மற்றும் ஊழல் கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக போராடுகிறது.
பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் தேசியக் கட்சி இல்லை, மற்ற அனைத்து தேசியக் கட்சிகளும் மாநில, பிராந்தியக் கட்சிகளாக சுருங்கி விட்டன. இந்திய தேசிய காங்கிரஸ் கூட இனி ஒரு தேசிய கட்சி அல்ல.
அது இனி இந்திய கட்சியும் இல்லை. அது சகோதர சகோதரி (ராகுல்,பிரியங்கா) கட்சியாக மாறிவிட்டது. பாஜக 18 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சீன மக்கள் கட்சிக்கு ஒன்பது கோடி உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.