சச்சின் பைலட் முதல்வர் ஆகக் கூடாது… அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா..!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. 2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதற்கிடையே, 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று இரவில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
நிலைமையை உணர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார். அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.
இது ஒருபுறமிருக்க, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்திருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் கூட்டத்தை நடத்துவதற்காக காத்திருந்தனர். சச்சின் பைல்ட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை. இதன்மூலம் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.