வீட்டுக்குத் தெரியாமல் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்கச் சென்ற பிளஸ்-1 மாணவர்..!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடி வேளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். இவரது மகன் தேவானந்த் (வயது 16), பிளஸ்-1 மாணவர்.
இவர், நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டு முன்பு ஆட்டோவில் வந்திறங்கி, பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் முதல்வரை சந்திக்க வேண்டும் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம், போலீசார் காரணத்தைக் கேட்டபோது, தனது தந்தை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற நிலையில் மாத தவணை கட்டாததால் தற்போது அந்த நிறுவனத்தினர் நெருக்கடி கொடுக்கின்றனர்.
இதனால் குடும்பத்தின் நிம்மதி தொலைந்து, கண்ணீரும் சோகமாக உள்ளனர். எனவே முதல்-மந்திரியை சந்தித்து உதவி கேட்பதற்காக வீட்டிற்கு தெரியாமல் வந்ததாக கூறினார். இதனைக் கேட்ட போலீசார், மாணவரை மியூசியம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள், அவரது தந்தைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
இதற்கிடையில் மாணவர் வீட்டுக்குத் தெரியாமல் தன்னை சந்திக்க வந்த தகவல், முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரியவந்தது. உடனே அவர், மாணவரையும் அவரது தந்தையையும் திருவனந்தபுரம் தலைமை செயலகம் வரவழைத்தார். பின்னர் மாணவரிடம் பேசிய அவர், கடனை அடைப்பதற்கு வழிகாணலாம். அதற்காக பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.