உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா- ஜனாதிபதி முர்மு தொடங்கி வைத்தார்..!!
கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. காவல் தெய்வமாக கருதப்படும் சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசூரன் எனும் அரக்கனை வதம் செய்த வெற்றி கொண்டாட்டத்தையே தசரா விழாவாக கர்நாடக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த தசரா விழா ‘நாட ஹப்பா'(கர்நாடகத்தின் பண்டிகை) என்றும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியம் மிக்க இந்த விழா இன்று தொடங்கியது. விழாவை இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். விழாவை தொடங்கி வைக்கவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளியில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தார். அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து அங்கு வெள்ளித் தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பூக்களால் அர்ச்சனை செய்து உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன், ஷோபா, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். கர்நாடகாவில் தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இதற்கு முன்பு எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரே தொடங்கி வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 நாட்கள் நடக்கும் தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தசரா விளையாட்டு தீப்பந்த ஊர்வலம், தொழில் கண்காட்சி, மலர் கண்காட்சி, உணவு திருவிழா, தசரா விளையாட்டு போட்டிகள், குஸ்தி போட்டி, பொருட்காட்சி, யோகா பயிற்சி, அரண்மனை வளாகத்தில் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி மலர் கண்காட்சி, சிற்பம் மற்றும் ஓவிய கண்காட்சி, சிறப்பு மின்னொளி காட்சி, மகளிர் தசரா, குழந்தைகள் தசரா, திரைப்பட விழா இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற உள்ளன.
தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் விழாவின் 9 நாட்களும் அரண்மனையில் சிறப்பு பூஜைகள், நவராத்திரி கொலு உள்பட பல்வேறு சம்பிரதாயங்கள் நடைபெறும். அதுபோல் இளைய மன்னர் யதுவீர் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் ராஜ உடையில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவார். இதுதவிர மைசூரு நகரம் முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது.
தசரா விழாவில் பங்கேற்க இதுவரை 290 கலைக்குழுக்கள் கர்நாடகா வந்துள்ளன. அம்பா விலாசில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற மற்றும் தேசிய அளவிலான குழுவினர் பங்கேற்பது சிறப்பம்சம் ஆகும். தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் அடுத்த மாதம் 5-ந் தேதி விஜயதசமி அன்று தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஜாட்டி சமூகத்தினர் ரத்தம் சொட்டும் மல்யுத்த போட்டி அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அந்த மல்யுத்த போட்டி முடிந்ததும் நந்தி மலையில் கொடியேற்று பூஜை நடத்தப்படும். அதையடுத்து 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமந்தபடி யானைகள் புடைசூழ வந்து நிற்கும். அப்போது அம்மன் மீது மலர்கள் தூவி ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கி வைக்கப்படும்.
இந்த முறை ஜம்பு சவாரி ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை. தசரா ஊர்வலம் வழக்கம்போல் மைசூரு அரண்மனையில் தொடங்கி பன்னிமண்டபம் வரை 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும். பன்னிமண்டபத்தை சென்றடைந்ததும் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வதம் செய்ததை நினைவூட்டும் விதமாக பிரமாண்ட வாணவேடிக்கை நடைபெறும். அத்துடன் தசரா விழா நிறைவுபெறுகிறது. ஜம்பு சவாரி ஊர்வலத்தில் இம்முறை மாநில அரசின் அனைத்து துறைகள் சார்பிலும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அலங்கார வண்டிகள் இடம்பெறும்.
இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தான் பொறுப்பேற்றார். அதன்பின்னர் முதல் வெளிமாநில நிகழ்ச்சியாக அவரது கர்நாடக சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. தசாரா விழாவை தொடங்கிவைத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் உப்பள்ளிக்கு சென்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பவுர சன்மானா’ என்ற பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் தார்வாரில் உள்ள ஐ.ஐ.டி.யில் (இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம்) புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்சின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தியை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
பின்னர் தெற்கு மண்டல வைராலஜி நிறுவனத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத்தொடர்ந்து செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்கிறார். மேலும் கர்நாடக அரசு சார்பில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவிக்கப்படுகிறார். இதையடுத்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல உள்ளார்.
ஜனாதிபதி வருகையையொட்டி மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரு, தார்வாரிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காலை 11 மணி அளவில் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார்.