புதிதாக 4,129 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பு 4-வது நாளாக சரிவு..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 22-ந்தேதி 5,443 ஆக இருந்தது. மறுநாள் 5,383, 24-ந்தேதி 4,912, நேற்று 4,777 ஆக குறைந்த நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுசுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 69 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,688 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 298 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை நேற்றை விட 579 குறைந்துள்ளது.
அதாவது 43,415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 13 மரணங்கள் உள்பட மேலும் 20 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,530 ஆக உயர்ந்துள்ளது.